வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தால் கடுமையான நடவடிக்கை.. எச்சரித்த சுகாதாரத்துறை!

 
Pregnant Mother

பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்த்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இப்போது மனோகரன் தனது மனைவி, குழந்தைகளுடன் சென்னை குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் சுகன்யா 3-வது முறையாக கடந்த 17-ம் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டதாகவும், பின்னர் வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, மனைவிக்கு பிரசவ வலி வந்த போது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்து மனோகரனே பிரசவம் பார்த்ததாகவும், இதுகுறித்த தகவலை அவர் வைத்திருந்த வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.  அந்த வாட்ஸ் அப் குழுவிற்கு ‘வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம்’ என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 1,024 பேர் உறுப்பினர்களாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இதுபோன்ற விபரீத செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தாலோ அல்லது வாட்ஸ்-அப்பில் வரும் தகவல்களை வைத்து பிரசவம் பார்த்தாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்  கர்ப்பிணி பெண்கள் முறையாக மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்களா? என்பதை தீவிரமாக கண்காணிக்க கிராம சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்ப்பிணி பெண்கள் பிரசவம் தரித்த மூன்று மாதத்தில் இருந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும், அவர்களுக்கான தடுப்பூசிகள் இரும்பு சத்து மாத்திரைகள், ஸ்கேன் போன்றவை முறையாக கிடைக்கிறதா? என்று கிராமப்புற செவிலியர்கள் அதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பிரசவக்காரர் இருக்கும் நேரத்தில் அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வீட்டில் வைத்து பிரசவம் பார்ப்பது தாய்க்கும் சேய்- யின் உயிருக்கும் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

TN-Govt

பிரசவத்திற்கு பிறகு அதிக ரத்தப் போக்கினால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மேலும் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. அதனால் அனைத்து பிரசவங்களும் மருத்துவமனைகளில் நடக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web