தெருவில் விளையாடிய சிறுவனை துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்கள்.. அருப்புக்கோட்டையில் அதிர்ச்சி!
அருப்புக்கோட்டையில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் பெரிய புளியம்பட்டி, சின்ன புளியம்பட்டி, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட நகரின் அனைத்து இடங்களிலும் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தெருவில் சுற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டுவதால் சில சமயங்களில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு விடுகிறது.
இந்த நிலையில் இன்று சின்னபுளியம்பட்டி முனியாண்டி தெருவில் கூட்டம் கூட்டமாக சுற்றிய நாய்கள் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த வெற்றிமாறன் என்ற சிறுவனை துரத்தி துரத்தி கடித்ததில் அந்த சிறுவன் முகம் உள்ளிட்ட பல இடங்களில் காயம் ஏற்பட்டது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தெருநாய்களால் கடிபடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.