கழுத்தை நெரித்த கடன் சுமை.. குடும்பமே எடுத்த சோக முடிவு.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

 
Chennai

சென்னையில் கடன் தொல்லை காரணமாக மகளை கொன்று கணவன் - மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி அடுத்த பெரிய சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (40). இவர் மணலியில் சிறு தானியங்கள் விற்கும் கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி லோகேஸ்வரி (35). இவர்களது மகள் காவியா (12). இவர், எம்.கே.பி நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். ஜெகநாதனுக்கு மணலியில் சொந்த வீட்டு மனை உள்ளது. இதில் வீடு கட்டுவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜெகநாதன் 40 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.

dead-body

இதனிடையே, ஜெகநாதனிடம் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த ஜெகநாத் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். அதன்படி, இன்று காலை மகள் காவியாவை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று உடலை படுக்கை அறையில் சாய்த்து வைத்துள்ளார். பின்னர், ஜெகநாதனும், அவரது மனைவி லோகேஸ்வரியும் படுக்கை அரையில் உள்ள மின்விசிறியில் ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஜெகநாதனின் தாயார் இன்று காலை தனது மகனுக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். வீட்டின் கதவு மூடப்பட்டிருந்த நிலையில் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது ஜெகநாதனும், அவரது மனைவியும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

Madhavaram Milk Colony PS

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஜெகநாதனும், அவரது மனைவி லோகேஸ்வரியும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளனர். மகள் காவியா படுக்கை அறையில் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து, 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web