நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்.. வாகனங்களை பறிமுதல் செய்யுங்க.. தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 
Number-plate

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் பெரும்பாலாலும் தங்களது வாகனத்தில் ஏதாவது ஒரு ஸ்டிக்கர்கள் ஒட்டி வைத்திருப்பார்கள். இதில் குறிப்பாக, மீடியாவில் வேலை செய்பவராக இருந்தால், பிரஸ் என்றும், காவல்துறையில் வேலை செய்பவர்கள் போலீஸ் என்றும், வழக்கறிர்கள் மற்றும் மருத்துவர்கள் அவர்களின் முத்திரைகளை தங்களது வாகனத்தில் ஒட்டி வைத்திருப்பார்கள். இந்த ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை நகரில் தனியார் வாகனங்களில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Number

அந்த மனுவில், கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற உச்சநீதிமன்றம் உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை எனவும், வாகனங்களின் முன்பக்கம், பின்பக்க கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் படங்கள், நடிகர்கள் படங்களை ஒட்டத் தடை விதிக்க வேண்டும் எனவும், பேருந்துகளின் பின்புறமும், பக்கவாட்டு பகுதிகளிலும் விளம்பரங்கள் செய்வதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வு, போக்குவரத்து விதிகளை மீறும் அரசியல்வாதிகளின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டது.  

High-Court

மேலும், ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை விதித்தும், கண்ணாடிகளில் கருப்பு கண்ணாடி ஒட்டியுள்ள வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 20ம் தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர். அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

From around the web