நேருவை அவதூறாகப் பேசிய ஸ்டாண்ட் அப் காமெடியன்! செல்வப் பெருந்தகை ஆவேசம்!!

 
bharat balaji standup comedian

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும் மகாத்மா காந்தியையும் இழிவு படுத்தும் வகையில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்த பரத் பாலாஜி என்பவருடைய வீடியோ சமுகத் தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது. இது தன் கவனத்துக்கு வந்தவுடன் ஆவேசம் அடைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

”சமூக ஊடகங்களில் ‘ஸ்டாண்ட் அப் காமெடி” என்ற பெயரில், பரத் பாலாஜி என்பவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களை மிக மிக இழிவாக கீழ்த்தரமான முறையில் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். இந்தியாவின் பிரதமராக 17 ஆண்டுகாலம் பதவி வகித்து, நவஇந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்பட்டவரும், உலக நாடுகளில் உள்ள அனைத்து தலைவர்களாலும் போற்றி பாராட்டப்பட்ட பண்டித நேரு அவர்களை இத்தகைய முறையில் இழிவாக பேசுவதை எவரும் அனுமதிக்க முடியாது.

இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். பண்டித நேரு அவர்களை தரம் தாழ்ந்த நரகல் நடையில் இழிவாக பேசிய பரத் பாலாஜியை காவல்துறையினர் கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவின் மகத்தான மனிதராக கருதப்பட்ட பண்டித நேரு அவர்களை பழித்து பேசியவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய அவதூறு பேச்சுக்கள் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினரின் மனதை புண்படுத்தியதோடு, கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இதுபோன்ற நாகரீகமற்ற பேச்சுக்கள் சமூக ஊடகங்களில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு காவல்துறையை சேர்ந்த சைபர் கிரைம் பிரிவினருக்கு இருப்பதை வலியுறுத்த விரும்புகிறேன்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் செல்வப் பெருந்தகை.


 

From around the web