மொரிஷியஸிலும் முதலமைச்சர் ஸ்டாலின் தான் ஹீரோ! மொரிஷியஸ் அமைச்சர் தகவல்
தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறையின் சார்பில் அயலகத் தமிழர்கள் தினம் 2025, சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்று வருகிறது.
நேற்று சனிக்கிழமை இந்த விழாவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருக்கும் தமிழர்களின் நிறுவனங்கள் அமைத்துள்ள அரங்கங்களை பார்வையிட்டவாறே அயலகத் தமிழர்களின் அன்பு உபசரிப்பில் திக்குமுக்காடிக் கொண்டே விழா மேடைக்கு வந்தார் துணை முதலமைச்சர்.
மொரிஷியஸ் நாட்டின் வெளியுறவுத் துறை இணை அமைச்சரும் தமிழ் வம்சாவளியினருமான ராஜன் நரசிங்கன் சிறப்புரை ஆற்றினார். மொரிஷியஸில் 60 சதவீதம் இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். 10 சதவீதம் பேர் தமிழ் வம்சாவளியினர் தான். என்னுடைய முன்னோர்களும் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்கள் தான். மொரிஷியஸில் நான் நான்காவது தலைமுறை தமிழர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மொரிஷியஸில் நல்ல மதிப்பிற்குரியவராக இருந்தார். தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் தான் மொரிஷியஸ் தமிழர்களின் ஹீரோவாக இருக்கிறார். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் முன்னேற்றம் அடைவதற்காக தமிழ்நாடு முதலமைச்ச ஸ்டாலின் அவர்களுடைய செயல்பாடுகளை நாங்கள் நன்றாக அறிந்துள்ளோம். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மொரிஷியஸில் நன்றாக அறியப்படுவர் ஆவார்
தமிழ்நாட்டுடன் நல்ல உறவைப் பேணவும் இணைந்து செயல்படவும், புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் ஆர்வமாக உள்ளோம். தமிழர்கள் மொரிஷியஸ் வாருங்கள் என வரவேற்கிறேன் என்று கூறினார்.
மொரிஷியஸிலும் முதலமைச்சர் ஸ்டாலின் ஹீரோ என்று குறிப்பிட்டுள்ளது கூடியிருந்த வெளிநாட்டுத் தமிழர்களிடமும் திமுகவினரிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது