நாவடக்கத்தோடு பேசுங்கள்! அண்ணாமலையை கண்டித்த எம்.எம்.அப்துல்லா எம்.பி!!

மும்மொழிக் கொள்கை தொடர்பாக ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தப் பதிவுக்கு பதிலளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை காலாவதியானக் கொள்கையை தமிழ்நாடு மக்கள் மீது திணிப்பது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அண்ணாம்லைக்குப் பதிலளித்துள்ள எம்.எம்.அப்துல்லா எம்.பி, நாவடக்கத்துடன் பேசுங்கள், மொழித்திணிப்புக்கு எதிராக நிற்பது காலாவதியான கொள்கை அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார்.
”சிபிஎஸ்இ பள்ளிகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவை என்கிற குறைந்தபட்ச அறிவாவது இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் விரும்புபவர்கள் இந்தி கற்றுக்கொள்ள எந்தத் தடையும் இல்லை. இந்தித் திணிப்பைத் தான் தமிழ்நாடு எதிர்க்கிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் மும்மொழி தேவை என்கிற எண்ணம் பாஜகவுக்கு இருந்தால், பாஜக ஆளும் வட இந்திய மாநிலங்களில் மக்கள் எந்த மூன்றாவது மொழியைப் படிக்கிறார்கள்?
எத்தனை மாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது? தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நடத்தும் பள்ளிகளில் ஏன் தமிழ் ஆசிரியர்கள் இல்லை? தமிழர்கள் இந்தி படிக்க வேண்டும் என்பதை நேரடியாக சொல்ல முடியாமல் மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் பாஜக ஆடும் நாடகம் தமிழ்நாட்டில் உள்ள சாமானிய மக்களுக்குக் கூட நன்கு புரியும்.
மொழித்திணிப்புக்கு எதிராக நிற்பது காலாவதியான கொள்கை அல்ல. மாநில உரிமை காக்கும் மகத்தான கொள்கை. நாவடக்கத்தோடு பேசுங்கள்!“ என்று எக்ஸ் தளத்தில் அண்ணாமலைக்கு பதிலளித்துள்ளார் அப்துல்லா எம்.பி.