சொத்துக்காக தந்தையை வெட்டிக்கொன்ற மகன்.. கொலையில் முடிந்த டிவி ஷோ!
சேலம் அருகே தனியார் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று குடும்பப் பிரச்சினையை பேசிய தந்தையை மகனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (67). கட்டிட வேலை செய்துவந்த இவருக்கு மாரியம்மாள் (65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ராஜா (40) என்ற மகனும், சந்திரா (35) என்ற மகளும் உள்ளனர். இதில், ராஜாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார். மகள் சந்திராவுக்கு திருமணம் ஆகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.
கருப்பண்ணனுக்கு சொந்தமாக தாண்டவராயபுரம் மற்றும் வெண்ணந்தூர் பகுதிகளில் சொத்துக்கள் உள்ளன. இதனை ராஜாவின் முதல் மனைவியின் மகனான சங்கர் பெயரில் எழுதி வைக்க கருப்பண்ணன் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கருப்பண்ணனுக்கும் மகன் ராஜாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனைவி மாரியம்மாளை பிரிந்து கருப்பண்ணன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனியார் டிவியின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கருப்பண்ணன், மாரியம்மாள், ராஜா மூவரும் பங்கேற்றனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில், இன்று வீட்டில் கருப்பண்ணன் தனியாக இருந்தார். அப்போது அவரது மனைவி மாரியம்மாள், மகன் ராஜா ஆகிய இருவரும் வீட்டிற்கு வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கருப்பண்ணனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். படுகாயம் அடைந்த கருப்பண்ணன், ரத்த வெள்ளத்தில் சாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் நகர போலீசார் கருப்பண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மாரியம்மாளையும் ராஜாவையும் தீவிரமாக தேடி வருகின்றனர். டிவி நிகழ்ச்சியில் ஆரம்பித்த சண்டை கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.