சொத்துக்காக தந்தையை இரக்கமின்றி தாக்கிய மகன்.. வீடியோ வைரலாகிய நிலையில் மகன் கைது!

 
Perambalur

பெரம்பலூர் அருகே சொத்து தகராறில் தந்தையை மகன் கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (68) இவரது மனைவி ஹேமா (65). இந்த தம்பதிக்கு சக்திவேல் (34) என்ற மகனும், சங்கவி (32) என்ற மகளும் உள்ளனர். குழந்தைவேலுவுக்கு சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சார்வாய்ப்புதூரில் சேகோ ஆலையும், பெரம்பலூரில் அரிசி ஆலையும், விவசாய தோட்டமும் உள்ளது. சக்திவேல் ஆத்தூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சேகோ ஆலை உள்ளிட்ட சொத்துக்களை தனக்கு எழுதி வைக்கும் படி குழந்தைவேலுவிடம் சக்திவேல் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு குழந்தைவேல் மறுத்ததால், கடந்த பிப்ரவரி 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பெரம்பலூரில் உள்ள தந்தையின் வீட்டுக்கு சென்று, வீட்டில் இருந்த குழந்தைவேலை சக்திவேல் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும் ஆத்திரம் தீராத சக்திவேல், மீண்டும் தந்தையை தாக்கியுள்ளார்.

Perambalur

இந்த சம்பவத்தால் மனம் உடைந்த நிலையில் இருந்த குழந்தைவேல், ஏப்ரல் 18-ம் தேதி உயிரிழந்தார். குழந்தைவேலுவை மகன் சக்திவேல் தாக்கிய சம்பவம் அவரது வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில், அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதனைத் தொடர்ந்து, ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரித்தனர். அப்போது இந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் நடந்ததாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டம் கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, கைகளத்தூர் போலீசார் நேற்று சக்திவேல் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அதன் பின் ஆத்தூரில் பதுங்கி இருந்து சக்திவேலை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.


இது தொடர்பாக ஆத்தூர் டி.எஸ்.பி சதீஷ்குமார் கூறுகையில், “குழந்தைவேல் பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வந்த நிலையில், அங்கு அவரது மகன் தந்தையை தாக்கி உள்ளார். இது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, அது தற்போது வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கையை கைகளத்தூர் போலீசார் எடுத்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

From around the web