புகையில்லா போகி பண்டிகை.. பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட மக்களுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் கொண்டாடப்படுவது போகிப் பண்டிகையாகும். பழைய கழிதலும், புதியன புகுதலும் போகிப் போண்டிகை என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். முந்தைய காலங்களில் மக்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் இயற்கை சார்ந்ததாக இருந்ததும். மண் பாண்டங்கள், தென்னை மரத்தின் மட்டைகளில் செய்த பொருட்களில் செய்ததாக இருந்தது. இவற்றை ஒரு வருடம் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் போகிப் பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்றைய நவீன காலத்தில் போகிப் பண்டிகை அன்று ஏதாவது பழைய பொருட்களை எரிக்க வேண்டும் என பிளாஸ்டிக் போன்ற இயற்கையை மாசுபடுத்தம் பொருட்களை எரித்து, காற்றை மாசை ஏற்படுத்துகிறோம்.
இந்த நிலையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் புகையில்லா போகி பண்டிகை 2024 கொண்டாட பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நம் முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன்பு பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்தனர். இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவதால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் இருந்தது.
ஆனால் இன்றைய காலகட்டங்களில் போகி பண்டிகை என்பது பழைய பொருட்களான பிளாஸ்டிக், துணிகள், ரப்பர் பொருட்கள், டயர், டியூப், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசுபாடு அதிகம் ஏற்படுகிறது.
இதனால் போகிப் பண்டிகை அன்று அடர்ந்த புகை காரணமாக விமான போக்குவரத்துகளில் தாமதம் ஏற்படுகிறது. சென்னை நகரில் போகி பண்டிகை அன்று எரிக்கப்படும் பொருட்களால் புகை மண்டலம் ஏற்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் பிளாஸ்டிக் போன்ற பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் வெளியாகும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண்ணெரிச்சல் போன்ற நோய்களும் ஏற்படுகிறது.
இத்தகைய செயல்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாமல் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த 19 ஆண்டுகளாக போகி பண்டிகைக்கு முன்பு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது.
Air Quality Index (AQI) of 34 locations of Tamil Nadu: 09.01.2024, 4 pm (Past 24 hours average). AQI is an indicator of the quality of the ambient air using a numerical value between 0 to 500.#TamilNaduPollutionControlBoard #TNPCB #AQI #AirQualityIndex #pollutionlegislation pic.twitter.com/dHk2FbHLcL
— Tamil Nadu Pollution Control Board (@Tnpcbofficial) January 12, 2024
இதன் காரணமாக கடந்த சில வருடங்களில் பழைய ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை எரிப்பது குறைந்துள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போகி பண்டிகையின் போது சென்னை நகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் விதமாக போகி பண்டிகை நாளிலும், முந்தைய நாளும் 15 இடங்களில் தொடர்ந்து 24 மணி நேரமும் காற்றின் தரம் கண்காணிக்க காற்று மாதிரி சேகரித்து ஆய்வு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆய்வில் கிடைக்கும் காற்றின் தர அளவு வாரிய இணையத்தில் வெளியிடப்படும். ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.