சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து 3 பேர் பலி.. நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

 
Sivakasi

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கடற்கரை. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஊராம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 40-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு சங்கு சக்கரம், புஸ்வாணம் உள்ளிட்ட பேன்சி ரக வெடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த இருளாயி (48), குமரேசன் (30), அய்யம்மாள் (54), சுந்தர்ராஜ் (27) ஆகியோர் ஒரு அறையில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெப்பம் காரணமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது. 

Sivakasi

கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கியது. இதில் 2 அறைகள் தரைமட்டமானது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். தொடர்ந்து பட்டாசு விபத்தில் உடல் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

ஆனால் சிறிது நேரத்திலேயே குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் இருளாயிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலையில் பட்டாசுக்கான ரசாயன கலவை செலுத்தும்போது உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் திரு. குமரேசன் த/பெ.சுப்புராஜ், திரு. சுந்தர்ராஜ் த/பெ.ராமகிருஷ்ணன் மற்றும் திருமதி. அய்யம்மாள் க/பெ. கருப்பையா ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

MKS

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருமதி. இருளாயி க/பெ. சுந்தர்ராஜ் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் திருமதி. இருளாயி அவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web