ரயில் படியில் அமர்ந்து பயணம்... தவறி விழுந்தது துடிதுடித்து பலியான வாலிபர்!

சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு செந்தூர் விரைவு ரயில் தினமும் இயக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று வழக்கம் போல் புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில் இரவு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்பதிவு செய்யாத பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இளைஞர் ஒருவர் ரயில் பாலத்தை கடந்த பின்னர் அவர் அமர்ந்திருந்த இடத்தில் இல்லை, இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அவர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்திருக்கலாம் என கருதி சீர்காழி ரயில் நிலையத்தில் ரயில் நின்றவுடன் அங்குள்ள போலீசாரிடம் தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் ரயில்வே போலீசார், தீயணைப்பு மீட்பு துறையினரின் உதவியுடன் கொள்ளிடம் பாலத்தில் ஆய்வு செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் படுகாயத்துடன் ஆற்றின் மணல் பரப்பில் இறந்து கிடப்பதை கண்டு பிடித்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் ஆற்றில் இரங்கி கயிறு கட்டி அவரது உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
விசாரணையில் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இளைஞர் திருநெல்வேலி மாவட்டம் திருவாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த அப்பாஸ் (21) என்பதும் பெயின்டரான இவர் சென்னையில் இருந்து பாபநாசம் சென்றபோது தான் கொள்ளிடம் பாலத்தில் ரயில் செல்லும் போது படிக்கட்டில் இருந்து நிலை தடுமாறி பாலத்தில் மோதி ஆற்றினுள் விழுந்து உயிரிழந்தது தெரியவந்து.
சக பயணிகள் துரிதமாக தகவல் கொடுத்த நிலையிலும் படுகாயம் அடைந்ததால் இளைஞரின் உடலை தான் மீட்க முடிந்தது. படிக்கட்டில் பயணம் செய்வது ஆபத்து என எவ்வளவு எச்சரித்தும் அதனை பின்பற்றாததால் இது போன்ற இழப்புகள் ஏற்படுவதாக ரயில்வே போலிசார் தெரிவித்தனர்.