நீரில் மூழ்கிய சகோதரிகள்.. காப்பாற்ற சென்ற சித்தப்பாவும் பலி.. குலதெய்வ கோவிலுக்கு வந்த இடத்தில் சோகம்!!

 
Alangudi

ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளத்துவிடுதி கிராமத்தில் உள்ள மயிலை அம்மன் கோவில் திருவிழாவிற்கு ஊட்டியை சேர்ந்த 40 பேர் வந்துள்ளனர். இந்நிலையில், ஊட்டியை சேர்ந்த விஜயகாந்த் என்பவர் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், அக்ஷயா (15), தனலட்சுமி (12), பூமிகா (10) என மூன்று மகள்கள் உள்ளனர்.

water

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் ஊரணியில் சகோதரிகளான சிறுமிகள் அக்ஷயா, தனலட்சுமி இருவரும் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கி உள்ளனர். இதையடுத்து இருவரையும் சிறுமியின் சித்தப்பா ஆனந்தகுமார் (29), மீட்க முயன்ற நிலையில் அவரும் நீரில் மூழ்கினார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளத்துவிடுதி இளைஞர்கள் உடனடியாக 3 பேரையும் மீட்டு ஆலங்குடி  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுமிகள் மற்றும் சிறுமிகளின் சித்தப்பா ஆகிய 3 பேரின் சடலங்களை கண்டு சிறுமிகளின் பெற்றோர் மற்றும் 10 வயது சகோதரி ஆகியோர் கதறி அழுதனர். 

Alangudi PS

இதையடுத்து 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆலங்குடி போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web