ஏரியில் மூழ்கி அக்கா, தம்பி பரிதாப பலி.. வளர்ப்பு நாயை குளிப்பாட்ட சென்றபோது சோகம்!
வாணியம்பாடி அருகே வளர்ப்பு நாயை குளிப்பாட்ட சென்ற போது ஏரியில் மூழ்கி அக்கா, தம்பி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகன். இவரது மனைவி மாலதி. இந்த தம்பதிக்கு ஜோதிலிங்கம் (10), ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் ஜோதிலிங்கம் 5-ம் வகுப்பு, ஜோதிகா 2-ம் வகுப்பு, ஜோதிஷ் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தாய் மாற்றும் தந்தை வேலைக்கு சென்று இருந்ததாலும், பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் ஏரியில் தவறி விழுந்த ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிலர் நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர். இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி கிராமிய போலிசார், உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தயுள்ளது.