சிக்னல் கோளாறு.. திடீரென நின்ற சென்னை மெட்ரோ.. ஸ்தம்பித்துப்போன மக்கள்!

 
Metro

சிக்னல் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் பற்றி தனியாக சொல்ல தேவையில்லை. அதுவும் காலை மற்றும் மாலை பீக் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிக அதிக அளவில் இருக்கும். சாலைகளில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் அணி வகுத்து நிற்கும். இதனால், அலுவலகம் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் சரியான நேரத்திற்கு செல்ல முடியுமா? ஒரு வித பதற்றத்தில் தான் பயணிக்க வேண்டியிருக்கும்.

இதனால், பயணிகள் மெட்ரோ ரயில் ரயில்களையும் தற்போது அதிக அளவில் பயணிக்க தொடங்கிவிட்டனர். இதனால், தற்போது மெட்ரோ ரயில்களிலும் நிற்க கூட முடியாத அளவுக்கு கடுமையான கூட்டம் காணப்படுகிறது. 15 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டாலும் பயணிகள் கூட்டம் பீக் நேரங்களில் அதிகமாகவே இருப்பதை காண முடிகிறது.

Metro

இந்த நிலையில், சிக்னல் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சின்னமலை ரயில் நிலையத்தில் இருந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ வரை ஒற்றைப் பாதையில் ரயில் இயக்கப்படுகிறது. மேலும் விம்கோ நகர் பணிமணையில் இருந்து நீல நிற வழித்தடத்தில் உள்ள சின்னமலை ரயில் நிலையம் வரை வழக்கமான சேவைகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.


அதேசமயம் வழக்கமான ரயில் சேவைகள் பச்சை நிற வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையே ஷார்ட் லூப் சேவை திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு” தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், மெட்ரோ பயணிகள் வேலைக்கு செல்வதற்கு முடியாமல் மிகவும் அவதியடைந்தனர்.

From around the web