மீண்டும் அதிர்ச்சி சம்பவம்... பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி யு.கே.ஜி. மாணவி பலி!!

 
Thenkasi

தென்காசி அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி யு.கே.ஜி. மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் தெற்கு கரும்பனூர் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மெக்கானிக் தனராஜ் (40). இவரது மனைவி லிங்கேசுவரி. இவர்களுக்கு விவேகா (8), சபீனா (6) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். அதில், விவேகா அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பும், ஆலங்குளத்தில் உள்ள தனியார் நர்சரி பள்ளிக் கூடத்தில் சபீனா யு.கே.ஜி. வகுப்பும் படித்தனர்.

baby-accident

நேற்று காலையில் வழக்கம்போல் சபீனா பள்ளிக்கூட வேனில் பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் வேனில் வீட்டுக்கு புறப்பட்டு வந்தாள். அப்போது சபீனாவின் வீட்டின் அருகில் வேனை நிறுத்தாமல், அதற்கு முந்தைய நிறுத்தத்தில் வேனை நிறுத்தி ஒரு குழந்தையை கீழே இறக்கி விட்டதாகவும், அந்த குழந்தையுடன் சேர்த்து சபீனாவையும் கீழே இறக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து வேன் புறப்பட்டபோது, எதிர்பாராத விதமாக சபீனா நிலைதடுமாறி வேனின் பின் சக்கரத்தில் விழுந்தாள். இதில் சிறுமி சபீனாவின் தலையில் வேனின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். இதனைப் பார்த்த அப்பகுதியினர் மற்றும் பெற்றோர் கதறி அழுதனர்.

Alangulam PS

இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான ஆலங்குளம் ஜோதி நகரை சேர்ந்த மாடசாமி மகன் ஸ்ரீராம்குமாரை (33) பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீராம்குமார், தனியார் நர்சரி பள்ளியை நடத்தி வந்ததாகவும், அவரே டிரைவராகவும் செயல்பட்டு மாணவ-மாணவிகளை வேனில் அழைத்து சென்று வீடுகளில் விட்டு வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

From around the web