அதிர்ச்சி.. டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பரிதாப பலி.. சாத்தூர் அருகே சோகம்!

 
Sathur Sathur

சாத்தூர் அருகே டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த 3 வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து டெங்கு ஒழிப்பு பணிகளில் தமிழ்நாடு அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இருந்த போதும் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Dengue

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேஸ்வரன். இவருக்கு திகன்யா ஸ்ரீ(4), தியா ஸ்ரீ (3) என்று 2 பெண் குழந்தைகள் இருந்தனர். மூத்த குழந்தை திகன்யாஸ்ரீ சாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார். இரண்டு குழந்தைகளுக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததால் அவர்களுக்கு விருதுநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து குழத்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், குழந்தைகள் இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் தியாஸ்ரீக்கு காய்ச்சல் அதிகரித்ததால், அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

Dead

இதனையடுத்து சிறுமி தியாஸ்ரீ மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தியா ஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web