அதிர்ச்சி.. நீரில் மூழ்கி மாணவர் மரணம்.. நண்பர்களுடன் குளித்தபோது நேர்ந்த சோகம்!

 
Udayarpalayam

உடையார்பாளம் பெரிய ஏரியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் கல்லக்குடி தெருவில் வசித்து வருபவர் சங்கர். இவரது மகன் சபரிவாசன் (19). இவர் கீழப்பழூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வந்தார். இவர் தனது நண்பர்களான அரசு (20), சக்தி (20), கோகுலக்கண்ணன் (21), சூரியா (20), ஹரிஹரன் (17), சரவணகுமார் (19) ஆகியோருடன் உடையார்பாளையம் அருகே மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் 3 நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.

water

இதனைத் தொடர்ந்து உடையார்பாளையம் பெரியகோவிலை சுற்றி பார்க்க சென்று உள்ளனர். அப்போது அங்குள்ள பெரிய ஏரியில் அரசு, சக்தி ஆகியோர் குளித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஏரியின் நடுவில் அமைந்துள்ள நீராவி மண்டபத்துக்கு சென்று உள்ளனர். அதை பார்த்த சபரிவாசனும் குளிக்க ஆசைப்பட்டு ஏரியில் குதித்து நீராவி மண்டபத்துக்கு பாதி தூரம் சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அரசு மற்றும் சக்தி ஆகியோர் சபரிவாசனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் நீரில் மூழ்கினார். இது குறித்து உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Udayarpalayam PS

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் தனபாலன் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சபரிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

From around the web