மாதம் முதல்நாளே ஷாக் நியூஸ்... அதிரடியாக உயர்ந்த எரிவாயு சிலிண்டர் விலை..! 

 
Gas

தமிழ்நாட்டில் மார்ச் மாதம் முதல் நாளான இன்று சமையல் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

gas

அதன்படி கடந்த ஜனவரி மாதம் 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகபயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 1,917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேவேளை, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் சிலிண்டர் ஒன்று ரூ.1068.50 விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், இன்று மார்ச் 1-ம் தேதி என்பதால், விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை சென்னையில் ரூ. 50 உயர்ந்து 1,118.50-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று முதல் ரூ. 351 உயர்ந்து, ரூ.2,268-க்கு விற்பனையாகிறது.

Commercial-Gas

ஹோட்டல் மற்றும் தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் விலை அதிரடியாக விலை உயர்ந்துள்ளதால் தேநீர், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அச்சமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

From around the web