சென்னையில் மீண்டும் அதிர்ச்சி! போதை ஊசி செலுத்திக்கொண்ட இளைஞர் மயங்கி விழுந்து பலி!

 
Chennai

சென்னையில் நண்பர்களுடன் போதை ஊசி செலுத்திக்கொண்ட சரித்திர பதிவேடு குற்றவாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு பட்டாளம் கனகராய தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் கஞ்சாமணி எனும் தீனதயாளன் (26). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது புளியந்தோப்பு, ஐசிஎப், வடபழனி, பேசின் பிரிட்ஜ், உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி, போதைப்பொருள் விற்பனை உட்பட 9-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

போதைப் பழக்கத்திற்கு அடிமையான கஞ்சாமணி போதை ஊசி செலுத்திக் கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கஞ்சா மணி தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (21), பிரபு (20) ஆகியோருடன் சேர்ந்து பட்டாளம் கனகராய தோட்டம் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் அமர்ந்து போதை ஊசியை உடலில் செலுத்தி கொண்டார்.

drugs

அப்போது கஞ்சாமணிக்கு போதை தலைக்கேறி‌ மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கி விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கூட்டாளிகள், அவரை மீட்டு புளியந்தோப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு ஓடி விட்டதாக தெரிகிறது. அங்கிருந்த மருத்துவர்கள் கஞ்சாமணிக்கு முதலுதவி அளித்து விட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌

அங்கு சிகிச்சை பெற்று வந்த கஞ்சாமணி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் புளியந்தோப்பு போலீசார் கஞ்சாமணி உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து சஞ்சய் மற்றும் பிரபுவை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Pulianthope PS

ஏற்கனவே சென்னையில் போதை ஊசி செலுத்தி 5-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் தற்போது சரித்திர பதிவேடு குற்றவாளி ஓருவர் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web