அதிர்ச்சி.. தாயிடமிருந்த கைக்குழந்தையை கடித்துக் குதறிய தெரு நாய்.. காயங்களுடன் மருத்துமவனையில் அனுமதி!

திருவொற்றியூரில் தாயின் கையில் இருந்த ஒன்றரை வயது குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்துக்குதறி, முகத்தை சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவொற்றியூர் பெரியார் நகர் விவேகானந்தர் தெருவில் வசித்து வருபவர் தேவி. இவர் தனது ஒன்றரை வயது பெண் குழந்தை தர்ணிகாவை தூக்கி கொண்டு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று திடீரென குழந்தை மீது பாய்ந்து முகத்தை சரமாரியாக கடித்து குதறியது.
இதனால் அந்த நாயிடம் இருந்து குழந்தையை காப்பாற்றுவதற்கு ஓடிவந்த தாத்தாவையும் பொதுமக்கள் 3 பேரையும் நாய் கடித்து குதறியது. இதில் குழந்தை உள்பட அனைவரும் ரத்தவெள்ளத்தில் துடித்தனர். உடனே அவர்களை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “திருவொற்றியூர், மணலி, மாதவரம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக ஏராளமானோர் தெரு நாய் கடிக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இது தொடர்பாக பலமுறை மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும், ஊழியர்கள் நாய்களைப் பிடித்து சென்று விட்டு, பின்னர் மீண்டும் அதே பகுதியில் விட்டு விடுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.