சிவ்தாஸ் மீனாவுக்கு புதிய பொறுப்பு.. தமிழ்நாட்டின் அடுத்த தலைமை செயலாளர் யார்?

 
Shivdas Meena

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பு புதிதாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தவுடன் வெ.இறையண்பு தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இவர் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தமிழ்நாடு தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா செயல்பட்டு வருகிறார். ஓராண்டுக்கும் மேலாக அவர் அந்த பொறுப்பில் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் சிவ்தாஸ் மீனாவுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.

Shivdas

பொதுவாக தலைமை செயலாளர் பொறுப்பில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிற துறைகளில் பொறுப்புகள் வழங்கப்படாது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக சிவ்தாஸ் மீனா தற்போது தலைமை செயலாளராக உள்ள நிலையில் அவர் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு சிவ்தாஸ் மீனா விரைவில் பணி ஓய்வு பெற உள்ளது தான் முக்கிய காரணமாகும்.

இதனை கருத்தில் கொண்டு தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைவராக செயல்படும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக அவரை நியமனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் சிவ்தாஸ் மீனா பணி ஓய்வு பெற்றாலும் கூட அந்த பொறுப்பில் தொடர வைக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

MKS

சிவ்தாஸ் மீனாவுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு புதிய தலைமை செயலாளர் நியமனத்துக்கும் தயாராகி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் அடுத்த தலைமை செயலாளர் யார்? என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிவ்தாஸ் மீனா தமிழ்நாட்டின் 49வது தலைமை செயலாளராக செயல்பட்டு வருகிறார். அடுத்து வருபவர் 50-வது தலைமை செயலாளராவார். இதனாலும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அந்த வகையில் பார்த்தால் தமிழ்நாடு தலைமை செயலாளர் பதவிக்கு என்.முருகானந்தம் ஐஏஎஸ்ஸின் பெயர் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தான் தமிழகத்தின் அடுத்த தலைமை செயலாளராக நியமனம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. தற்போது என்.முருகானந்தம் ஐஏஎஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலாளராக உள்ளார்.

From around the web