திசைமாறும் காற்று? முதலமைச்சர் கூட்டத்தில் செங்கோட்டையன்!!

அதிமுகவில் கலகக் குரல் எழுப்பிவரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக கோபி, ஈரோட்டில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாக் கூட்டங்களில் பேசி வந்த செங்கோட்டையன் முதலமைச்சர் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே சென்னை வந்துள்ளதாகவும் தெரிகிறது.
செங்கோட்டையனைப் பார்த்த முதலமைச்சரின் முகத்தில் மகிழ்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. எதிர்பக்கத்தில் வணக்கம் வைத்த செங்கோட்டையனுக்கு பதில் வணக்கம் தெரிவித்து உக்காருங்க உக்காருங்க என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இது செங்கோட்டையனுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் ஊரகத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் இந்த ஆய்வுக்கூட்டத்தில் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுகவின் மூத்த எம்.பி.ஆன எடப்பாடி பழனிசாமியின் விசுவாசி தம்பித்துரை பங்கேற்கவில்லை. அமைச்சர்கள் ஐ பெரியசாமி. மா.சுப்பிரமணியன் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் செங்கோட்டையன் கலந்து கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அதிமுகவினரான அமைச்சர்கள் சு.முத்துசாமி, சேகர்பாபு வீசிய வலையில் செங்கோட்டையன் சிக்கிக் கொண்டாரா என்பது விரைவில் தெரிய வரும்.