அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே Vs அடித்துக் கொண்ட அன்புமணியும் ராமதாஸும்!!
அன்புமணி - ராமதாஸ் போட்ட பொதுவெளிச் சண்டையைப் பார்த்தபோது, ஒருவர் மீதான மதிப்பு பன்மடங்கு பெருகியது. முதல்வர் ஸ்டாலின் மீது! நிற்க. ||அன்புமணிக்கு எல்லாவற்றையுமே தங்கத்தட்டில் வைத்து கொடுத்தார் அவரது தந்தை ராமதாஸ். தலைமைப் பதவி, எம்பி பதவி, மத்திய அமைச்சர் பதவி, எல்லாமே.
ஆனால் தளபதி ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல. 'சோ' போன்ற இன எதிரிகளே "ஸ்டாலினை வாரிசு அரசியல் என்று சொல்ல முடியாது" என்று அவரை அங்கீகரித்தபோதும், பொதுமக்களே அவருக்குப் பொறுப்புகளைத் தர தயாராக இருந்தபோதும், அவர் தந்தை எல்லாவற்றையுமே அவருக்கு மிகத் தாமதமாகத்தான் தந்தார். "ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு" என்ற கலைஞரின் பொதுவெளிப் பாராட்டைப் பெறவே அவர் சில பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது.
சமீபத்தில் நடந்த, இளம் பேச்சாளர்களுக்கான நிகழ்ச்சியில், தன் சிறுவயதில் திமுக மேடையில் பேச யார் யாரிடமோ எல்லாம் கேட்டு அந்த வாய்ப்பைப் பெற்றதாக ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார் முதல்வர். ஆச்சரியமாக இருந்தது. இதுதான் தளபதியின் அரசியல் பாதை. ஆனால் ஒன்றை யோசித்துப் பாருங்கள். எதையுமே தனக்கு எளிதாகத் தந்துவிடாத அந்தத் தந்தையை தளபதி எப்படி கவனித்துக் கொண்டார். தொண்டர்களுக்குக் கூட சில நேரம் கலைஞர் மேல் செல்லமாகக் கோபம் வந்திருக்குமே தவிர, ஒருநாளும் தளபதிக்கு அந்தச் சுவடு கூட இருந்ததாகத் தெரியவில்லை.
இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். ஒரு மகன், பொதுவாழ்க்கையில் இருக்கும் தன் தந்தையை மதிப்பது, தந்தை பொதுவெளியில் நடந்துகொள்வதை வைத்து மட்டுமல்ல. வீட்டிலும் அவர் அதே தன்மையுடன் இருந்தால்தான் மதிப்பும் மரியாதையும் வரும். வெளியில் வீர வசனம், தியாகம் எல்லாம் பேசிவிட்டு வீட்டில் கேவலமாக, சின்னத்தனமாக நடந்துகொண்டால் எந்த மகனுக்கும் தந்தை மீது மதிப்பு இருக்காது. "நீ என்ன நடிக்கிற? உன்ன பத்தி எனக்குத் தெரியாதா?" என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். மேடை என்று கூட பார்க்காமல் குழாயடி போல அடித்துக் கொள்வார்கள்.
கலைஞர் விஷயத்தில் அவர் வீட்டிலும் 'தலைவர்' தன்மையுடன் இருந்திருக்கிறார். அதனால்தான் தந்தை என்ற உறவை முதன்மையாக வைத்துப் பார்க்காமல், தலைவர் என்ற பொறுப்பை முதன்மையாக வைத்தே கலைஞரைப் பார்த்திருக்கிறார் தளபதி. அதனால்தான் அவரது முடிவுகளை எல்லாம் அவரால் கடைசிவரை மனதார ஏற்றுக்கொள்ள முடிந்தது. கலைஞர் மறைந்த அன்று தளபதியின் கவலையும், பொறுமையும், பொறுப்பும் நிறைந்த செயல்பாட்டைப் பார்த்து "புள்ளனு பெத்தா இப்படி பெக்கணும்" என சொல்லாத தகப்பன்கள் இல்லை.
நேற்று ஏனோ இந்த மேடைச் சண்டையைப் பார்த்தவுடன் இதெல்லாம் நினைவில் வந்துபோனது. உண்மையில் மகன் விஷயத்தில் கலைஞர் மிகவும் கொடுத்துவைத்தவர். "அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே..." என்று தளபதி ஸ்டாலின் சொன்னது வெறும் பேச்சு அல்ல. அது அவரது 'ஒருவரி சுயசரிதை'.
-டான் அசோக்