மாணவனுக்கு பாலியல் தொல்லை... தமிழ் ஆசிரியர் போக்சோவில் கைது! தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்

ஆலங்குளம் அருகே பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரைலிங்கம் (43). இவர், அதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் முன்னிலையில் பாலியல் ரீதியாக கேலி கிண்டல் செய்ததாக புகார் எழுந்தது. இதனால் மனமுடைந்த மாணவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில், பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தது குறித்து பெற்றோர் கேட்டபோது மாணவன் தனக்கு நடந்தது குறித்து சொல்லி அழுதிருக்கிறார். இதையடுத்து மாணவனின் பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், குற்றம் உறுதியானதை அடுத்து, ஆசிரியர் ராஜதுரைலிங்கம் மீது போக்சோ மற்றும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவரை ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.