திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை வழக்கு.. என்ன காரணம்?

 
Dayanidhi Maran

மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக சண்முகம் ஐஏஎஸ் இருந்தார். அவரை அந்த ஆண்டு மே 13-ம் தேதி அன்று திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் நேரில் சந்தித்தனர். அப்போது பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனர். இந்தச் சந்திப்பின் போது தங்களை தலைமைச் செயலாளர் அவமானப்படுத்தி விட்டதாக திமுக எம்பிக்கள் பத்திரிகையாளர்கள் மத்தியில் கூறினார்கள்.

திமுக எம்பி டி.ஆர்.பாலு நடந்தவற்றை விவரித்து பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, “This is the problem with you people” என்று தலைமைச் செயலாளர் எங்களைப் பார்த்துச் சொன்னார். இதற்கு என்ன அர்த்தம் தயா என்று தயாநிதி மாறனிடம் அப்போது டிஆர் பாலு கேட்டார். அதற்கு “எங்களை மூன்றாம் தர மக்களைப் போல் நடத்தினார். அந்த வார்த்தையை வாயில் சொல்ல முடியவில்லை. நாங்கள் தாழ்த்தப்பட்ட மக்களா?” என்று விளக்கமளித்து பின்பு தனது ஆதங்கத்தை தயாநிதி மாறன் வெளிப்படுத்தி இருந்தார்.

Dayanidhi Maran

தயாநிதி மாறனின் இந்த பேச்சு சர்ச்சையானதையடுத்து கூட்டணியில் இருந்த விசிக அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்து. இதையடுத்து அடுத்த ஒரே நாளில் தான் பேசியதற்காக தயாநிதி மாறன் எம்பி வருத்தமும் தெரிவித்தார்.

இதுகுறித்து தயாநிதி மாறன் அன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளரைச் சந்தித்தது குறித்து நான் அளித்த பேட்டியின் போது, தலைமைச் செயலாளர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாழ்வான முறையில் நடத்தினார் என்ற அர்த்தத்தில் தான் கூறியிருந்தேனே தவிர எவருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்குச் சிறிதும் இல்லை. யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

Dayanidhi Maran

இதனிடையே தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டி தயாநிதி மாறன் மீது கோவை காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் இவ்வழக்கு தொடர்பாக தயாநிதி மாறன் நேரில் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

From around the web