மருத்துவர்கள் கூறிய வார்த்தை.. மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2 நாள் சிகிச்சைக்கு பிறகு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து இன்று மாலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். இவர் கடந்த ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். முதலில் அவரது வீடு, அலுவலகம் மற்றும் நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அதன்பிறகு தான் அவர் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை என்பது கடந்த ஆண்டு ஜுன் 14-ம் தேதி நடந்தது.
இந்த கைது நடவடிக்கைக்கு முக்கிய காரணம் அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்காகும். அதாவது கடந்த 2014-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது பணிக்கு அவர் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் ரெய்டு செய்த அமலாக்கத்துறை அவரை கடந்த ஆண்டு கைது செய்தது. அதன்பிறகு அவரிடம் வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடந்தது. அதன்பிறகு செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அமலாக்கத்துறை விசாரணைக்காக அவரை அழைத்து சென்றபோது நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறினார். இதையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
அதன்பிறகு செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதற்கிடையே தன் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்வும், ஜாமீன் கோரியும் நீதிமன்றங்களை நாடியும் எந்த பலனும் இல்லை. தற்போது அவரது நீதிமன்ற காவல் 49 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் சிறையில் ஓராண்டுக்கும் மேலாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதியம் சிறையில் அவர் மதிய உணவு சாப்பிட்டார். அதன்பிறகு அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் அவருக்கு பரிசோதனையுடன் கூடிய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சிகிச்சையை தொடர்ந்து செந்தில் பாலாஜி குணமடைந்து வந்தார். இதையடுத்து நேற்று ஒருநாள் மருத்துவமனை டாக்டர்கள் செந்தில் பாலாஜியை கண்காணித்தனர். இத்தகைய சூழலில் தான் இன்று செந்தில் பாலாஜியின் உடல்நலம் என்பது சீரானது. இதையடுத்து செந்தில் பாலாஜியிடம், “உங்களின் உடல்நலம் சீராகி உள்ளது. உங்களுக்கு வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா? பிரச்சனை இல்லையென்றால் டிஸ்சார்ஜ் ஆகி கொள்ளலாம்” என தெரிவித்தனர்.
இதை கேட்ட செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் ஆகி கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து இன்று மாலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அங்கிருந்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.