மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்... தமிழ்நாடு அரசு அறிவிப்பு!!

 
IAS

தமிழ்நாட்டில் முக்கிய துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா கடந்த 11-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவையில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த நிலையில் இன்று, துறைச் செயலாளர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகளின் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சரின் செயலாளராக இதுவரை இருந்த உதயசந்திரன், நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Gagandeep-Singh

உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி போக்குவரத்துத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். போக்குவரத்துத் துறை செயலாளராக இருந்த கோபால் தமிழ்நாடு விஜிலென்ஸ் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதேபோல சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப் சிங் பேடி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராகவும், இப்பொறுப்பை வகித்து வந்த செந்தில்குமார் ஊரக வளர்ச்சித் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுப்பணித் துறைச் செயலர் க.மணிவாசன் சுற்றுலாத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். சுற்றுலாத் துறை செயலாளராக இருந்த சந்திரமோகன் பொதுப்பணித் துறை செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். 

TN-Govt

பொதுத் துறை செயலாளராக இருந்த ஜெகன்னாதன் உணவுத் துறை செயலாளராகவும், பள்ளி கல்வித் துறை ஆணையராக இருந்த நந்தகுமார், மனிதவள மேலாண்மைத் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உணவுத் துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web