செங்கோட்டையன் டெல்லி விசிட்.. மறுபடியும் அதிமுக செங்குத்தாக பிளவுபடுகிறதா?

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக அவருடைய மறைவுக்குப் பிறகு எம்,ஜி.ஆரின் மனைவி ஜானகியின் தலைமையில் ஒரு பிரிவாகவும் ஜெயலலிதா தலைமையில் மற்றொரு பிரிவாகவும் பிளவுபட்டது. இரட்டை இலை சின்னமும் முடங்கியது. இரட்டைப் புறா சின்னத்தில் ஜானகி அணியும் சேவல் சின்னத்தில் ஜெயலலிதா அணியும் போட்டியிட்டது.
ஜெயலலிதாவின் சேவல் சின்னம் 27 இடங்களைப் பெற்றது. அதில் பெரும்பான்மை இடங்கள் கொங்கு மண்டலத்திலே என்பது முக்கியமானது. ஜானகி அணியின் சார்பில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ஆண்டிப்பட்டி தொகுதியில் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியுற்றார். ஜெயலலிதா போடிநாயக்கனூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் வெற்றி பெற்றார்.
எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் தொகுதியிலும் சேவல் சின்னத்தில் வெற்றி பெற்றனர். ஜானகி அணியில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மட்டுமே சேரன்மாதேவி தொகுதியில் இரட்டைப் புறா சின்னத்தில் வென்றார்.
தன்னால் கூட வெற்றி பெற முடியாத நிலையில் ஜெயலலிதா தலைமையில் 27 இடங்களை வெற்றி பெற்றதை உணர்ந்த ஜானகி கட்சியை ஜெயலலிதா தலைமையில் ஒரே பிரிவாக செயல்பட ஒத்துழைத்தார். இரட்டை இலை சின்னமும் மீட்கப்பட்டது. 1989க்குப் பிறகு ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக மீண்டும் பிளவுபட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி பிரிந்தது. டிடிவி தினகரன் தலைமையில் மற்றொரு அணி பிரிந்தது.
ஓ.பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் கட்சியில் சேர்த்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. டி.டி.வி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என தனிக்கட்சி தொடங்கி குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வருகிறார்.
தற்போது மூத்த தலைவரான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் பேச்சு வார்த்தையே இல்லை. ஆனாலும் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் செங்கோட்டையனே கட்சியினருக்கு அவை நடவடிக்கை குறித்து விளக்கினார். அதையே எல்லோரையும் பின்பற்றச்செய்தார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து அதிமுக - பாஜக கூட்டணி பற்றி பேசிவிட்டு வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதை அவர் மறுத்தாலும் டெல்லியில் பேட்டி ஒன்றில் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்ததை அமித் ஷா சொல்லிவிட்டார். எடப்பாடி பழனிசாமியை அடுத்து அண்ணாமலை அமித்ஷாவை சந்தித்தார். அவருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அடுத்ததாக செங்கோட்டையன் டெல்லி சென்று அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அமித் ஷாவை சந்தித்த செய்தி தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு குறித்து செங்கோட்டையனோ பாஜக தரப்போ எதுவும் தெரிவிக்க வில்லை என்றாலும் சந்திப்பை செய்திகள் உறுதி செய்கின்றன.
செங்கோட்டையன் அமித் ஷா சந்திப்பு தான் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்த அண்ணாமலைக்கு அறிவுரை சொன்ன அதே வேளையில் எடப்பாடி பழனிசாமிக்கும் செக் வைத்துள்ளார் அமித் ஷா எனத் தெரிகிறது. எடப்பாடியின் தலைமையிலான அதிமுகவை மீண்டும் இரண்டாகுமோ என்ற அச்சம் தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையன் எடப்பாடி தலைமையில் கட்சி இரண்டு பட்டால் சின்னம் முடங்குவதுடன் கொங்கு மண்டலத்திலும் கட்சிக்கு பேரிடியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!
அதிமுக மீண்டும் பிளவுபடுமா ? எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் மற்றும் அமித் ஷா கைகளில் தான் முடிவு இருக்கிறது!
-ஸ்கார்ப்பியன்