எடப்பாடியை புறக்கணிக்கும் செங்கோட்டையன்! மோதல் முற்றியது !!

இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். ஆனால் எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவில் உட்கட்சி பூசல் மீண்டும் வெடித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் மீண்டும் புறக்கணித்து வருகிறார் மூத்த தலைவர் செங்கோட்டையன். சமீபத்தில் செங்கோட்டையன் பங்கேற்ற எம்.ஜி.ஆர் பொதுக்கூட்ட விழாவிலும் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்திருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா போஸ்டரிலும் எடப்பாடி பழனிசாமி பெயரை செங்கோட்டையன் தவிர்த்துள்ளார். ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை நீக்கி விட்டு பொதுச்செயலாளராக பொறுப்பேற்கும் திட்டத்தில் செங்கோட்டையன் உள்ளதாகவும் அவருக்கு பாஜக பின்னணியில் உதவுவதாகவும் ஒரு தகவல் உலவுகிறது. இன்னொரு புறம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் திமுகவுக்குச் செல்ல செங்கோட்டையன் தயாராக உள்ளதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. எதுவாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை இனிமேல் ஏற்க செங்கோட்டையன் தயாராக இல்லை என்பதாகத் தெரிகிறது.
செங்கோட்டையனின் போர்க்குரல் அதிமுகவை மேலும் பிளவுபடுத்துமா அல்லது பிளவுபட்டவர்களை ஒருங்கிணைக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.