தென்காசி மாவட்டத்தில் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்திற்கு இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் புலித்தேவன் பிறந்தநாள், ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்ச்சியை முன்னிட்டு, இன்று முதல் வரும் 21-ம் தேதி வரையும், இதேபோல் ஆகஸ்ட் 30-ம் தேதி மாலை 6 மணி முதல் செப். 2-ம் தேதி வரையும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் 20.08.2024 அன்று ஒண்டிவீரன் 253-வது வீரவணக்க நிகழ்ச்சி மற்றும் 01.09.2024 அன்று நெல்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெற உள்ளது.
பூலித்தேவன் 309-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்துவது வழக்கம். இதற்காக உள்ளுர், தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்தும் வருகைத்தரும் பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள் வருகை தருவார்கள்.
இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுமைக்கும், 18.08.2024 இன்று மாலை 6 மணி முதல் 21.08.2024 காலை 10 மணி வரையும் அமலில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வருகிற 30.08.2024 மாலை 6 மணி முதல் செப்டம்பர் மாதம் 2-ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்த நேரத்தில் அனைவரும் கூட்டமாக செல்லாமல் நான்கு நபர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.