முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம்.. சென்னை வாலிபரை கைது செய்த போலீஸ்!
ஆவடி அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரப்பபை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு, சமூக வலைத்தளம் வாயிலாக சென்னை கேளம்பாக்கம், சர்ச் தெருவைச் சேர்ந்த பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறியது. 2022-ம் ஆண்டு மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் தங்கள் வீடுகளுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்துகொண்டு திருநின்றவூரில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் இளம்பெண்ணிடம் நகை, பணம் கேட்டு துன்புறுத்திய பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங், பின்னர் அவரது வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு இளம்பெண்ணுடன் இருந்த தொடர்பை துண்டித்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து இளம்பெண் அவரைத் தேடி கேளம்பாக்கம் வீட்டுக்கு சென்றார்.
அப்போது பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் ஏற்கனவே பதிவு திருமணம் செய்து கொண்ட திருநின்றவூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங், இளம்பெண்ணிடம் “உன்னை பதிவு திருமணம் செய்து கொண்டதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன்” எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பட்டாபிராம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா தேவி வழக்குப்பதிவு செய்து, முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து கொண்ட பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.