நவம்பர் 1-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவம்பர் 1-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் சுவாமி அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 2009ல் கடைசியாக நடத்தப்பட்டது. இதற்கிடையே நடப்பாண்டில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு ரூ.64 லட்சத்து 60 ஆயிரம் செலவில் கடந்த 9 மாதங்களாக திருப்பணிகள் நடந்தன.
இக்கோவிலில் கோபுரம் கிடையாது என்பதால், சுவாமிக்கு பாலாலயம் செய்யாமல் திருப்பணிகள் நடந்து வந்தன. முதற்கட்டமாக, விநாயகர் கோவில் புனரமைப்பு, கோவில் உள்புறம், வெளிப்புறத்தில் வர்ண பூச்சுகள், சுவாமி சிலைகளுக்கு வர்ணம் பூசுதல், 33 விதமான ஆஞ்சநேயர் சிலை வடிவமைப்புடன் கூடிய பணிகள் நிறைவடைந்துள்ளன.
தற்போது பணிகள் முடிவடைந்து நவம்பர் மாதம் 1-ம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரும் நவம்பர் 1ம் தேதி பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற உள்ளது. இதனையொட்டி நாமக்கல் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உமா அறிவித்துள்ளார். இதற்கு மாற்றாக நவம்பர் 4ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.