கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கியது. பருவமழை துவக்கத்தில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது. பருவமழை ஆரம்பிக்கும் போதே சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. தற்போது, உள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழ்நாடு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கர்நாடக மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோவை, திருப்பூரில் கனமழை வெளுத்து வாங்கியது.
இன்று மாலையில் கோவை, ஈரோடு, திருப்பூர், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. தென்காசியில் சங்கரன்கோவில், ஆலங்குளம், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. கோவையில் பல்வேறு இடங்களில் மழையின் காரணமாக வெள்ளம் தேங்கி நிற்கிறது. தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதான வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.
குறிப்பாக கோவையில் இன்று காலையில் இருந்தே பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் கோவையில் நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை கருதி நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கோவையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார். இதேபோன்று திருப்பூரிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அம்மாவட்ட ஆட்சியரும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். தொடர்ந்து கனமழை விடாமல் பெய்து வருவதாலும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் கிற்ஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.