வரும் 14-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
Leave

மேல்மலையனூர் திருத்தேர் விழாவை முன்னிட்டு வரும் 14-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்காளம்மன் கோவிலில் வீற்றிருக்கும் அம்மன், புற்று மண்ணால் சுயம்புவாக உருவானவள் என்கிறது தல வரலாறு. நான்கு திருக்கரங்களுடன் இடதுகாலை மடித்து, வலதுகாலைத் தொங்கவிட்டபடி பிரம்ம கபாலத்தை மிதித்தவாறு வடக்கு திசை நோக்கி அருட்காட்சி புரிகிறார் அம்மன். புற்று வடிவில் தோன்றிய இந்த அம்மனுக்கு புற்று தேவி என்றும் பெயருண்டு.

இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல், ஒவ்வொரு வருடமும் மாசி மாத பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், வரும் மார்ச் 8-ம் தேதி மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டுஅனைத்து துறை அலுவலர்களுடன் மாசி பெருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மேல்மலையனூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Melmalayanur

கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி கலந்து கொண்டு அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழாவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் குறித்துஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மார்ச் 8-ம் தேதி கொடியேற்ற விழா, 9-ம் தேதி மயான கொள்ளை விழா, மார்ச் 12-ம் தேதி தீமிதி விழாவும், மார்ச் 14-ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்த முக்கிய திருவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு உள்ளிட்ட ஆந்திரா கர்நாடகா பாண்டி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம் இவ்விழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி ஆலோசனை நடத்தினார்.

Local-holiday

மேலும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள், குடிநீர், கழிவறை வசதிகள், தடையில்லா மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் மார்ச் 14-ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுவதால் அன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்கு மார்ச் 23-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பழனி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

From around the web