வரும் 12-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
Leave

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கொடை விழாவை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆண் பக்தர்களுக்கு கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் பிரசித்தமோ, அது மாதிரி நெல்லை, குமரி மற்றும் கேரள மாநில பெண் பக்தர்களுக்கு பெண்களின் சபரிமலை போன்றதாகும். கேரள மாநில பெண்கள் இருமுடி கட்டிக்கொண்டு இக்கோவிலுக்கு வந்து இங்குள்ள பகவதியம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்று போற்றப்படுகிறது.

Kanniyakumari

கேரள கோவிலை போன்று அமைப்பு கொண்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வருகின்றனர். சபரிமலைக்கு ஆண்கள் 41 நாள்கள் விரதம் இருந்து,பயபக்தியுடன் சென்று வழிபட்டு வருவதைப் போல, ஒவ்வொரு ஆண்டும் மாசி கொடை விழாவை ஒட்டி கேரளத்து பெண்கள் 41 நாள்கள் பயபக்தியுடன் விரதம் இருந்து, இருமுடி கட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வார்கள்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் கொடைவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இவ்விழாவில் தமிழ்நாடு மட்டுமல்லாது, கேரளா முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் வந்து பகவதியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உட்பட, தமிழ்நாடு கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டனர்.

Local-holiday

இத்திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மார்ச் 12-ம் தேதி விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக் கொடைவிழாவை முன்னிட்டு மார்ச் 12-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12-ம் தேதி விடப்படும் உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஏப்ரல் 6-ம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

From around the web