வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
leave

தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு முன்னிட்டு சேலம் மாவட்டதிற்கு வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீர்த்தகிரி என்ற இயற்பெயர் கொண்ட தீரன் சின்னமலை ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதியில் 1756-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். இளமையிலேயே பல்வேறு வித்தைப் பயிற்சிகளை இளைஞர் படைகளோடு உருவாக்கி வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தான் ஆகியோரோடு சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்டு பல்வேறு போர்களில் வெற்றிவாகை சூடியவர்.

Deeran chinnamalai

கிழக்கிந்திய கம்பெனி படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க பல்வேறு கட்டங்களாக போர் புரிந்து வந்த இவர், சூழ்ச்சி மூலம் கைது செய்யப்பட்டு, சங்ககிரி கோட்டையில் 1805-ம் ஆண்டு ஆடிப்பெருக்கு அன்று தூக்கிலிடப்பட்டார். அவரை பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆடிப்பெருக்கு தினத்தன்று நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி  தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார்.

Local-holiday

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதன்படி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது.” என்று கூறப்பட்டுள்ளது.

From around the web