வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்த பள்ளி வேன்... 17 குழந்தைகள் காயம்.. திருக்கடையூர் அருகே பரபரப்பு

 
Thirukadaiyur

திருக்கடையூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 17 குழந்தைகள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே உள்ள ஆக்கூர் பாரதியார் வீதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் 350-க்கு மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று ஆக்கூரை சேர்ந்த ஓட்டுநர் சாகுல் (40) என்பவர் மருதம்பலத்தில் இருந்து 17 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகளை பள்ளி வேனில் ஏற்றிக்கொண்டு நத்தம் கிடங்கல் வழியாக வந்து கொண்டிருந்தார். 

accident

அப்போது ஒரு வளைவில் திருப்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறிய வேன் அங்குள்ள ஆக்கூர் வடிகால் வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த குழந்தைகள், ஆசிரியைகள் காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த குழந்தைகள், ஆசிரியைகளை மீட்டு அருகில் உள்ள ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட கல்வி அலுவலர் சிவதாஸ், தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். 

Poraiyar PS

இதில் படுகாயம் அடைந்த ஆசிரியை கிருஷ்ணவேணி மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு வேன் ஓட்டுநர் சாகுலிடம் விசாரணை மேற்கொண்டனர்.

From around the web