டெங்கு காய்ச்சல் பாதித்து பள்ளி மாணவன் பலி.. சென்னையில் அதிர்ச்சி!

 
Chennai

பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மழை காலம் தொடங்கும் முன்பாகவே தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து விட்டது. மாநிலம் முழுவதும் சுமார் 500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவிற்கென்று பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய ஏடிஸ் ஏஜிப்தி என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. 

Dengue

இந்த நிலையில், பூந்தமல்லி கபாலி தெருவை சேர்ந்த சிறுவன் ராஜ் பாலாஜி (15), குமணன்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அவதிப்பட்டு வந்த ராஜ் பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மாணவனின் உடல் நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மாணவன் ராஜ் பாலாஜி சிகிச்சை பலனின்றி நேற்று (அக். 30) உயிரிழந்தார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “ராஜ் பாலாஜிக்கு காய்ச்சல் சற்று சரியான நிலையில் உடலில் உப்பு அதிகமாக இருந்ததால், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்” என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். 

boy-dead-body

மேலும், காய்ச்சலில் இருந்த சிறுவன் ராஜ் பாலாஜியின் சிறுநீரகம் செயல் இழந்து உயிர் இழந்ததாக சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் நீடித்தால் காலம் தாழ்த்தாமல் மருத்துவமனைக்கு சென்று உரிய  பரிசோதனை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

From around the web