பள்ளி ஆண்டுவிழா.. 5 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை.. 2 ஆசிரியர்கள் கைது!

 
Guduvancheri

கூடுவாஞ்சேரி அருகே 5 வயது சிறுமிக்கு 2 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி பகுதியில் பிரபல தனியார் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. அப்போது, யுகேஜி படிக்கும் 5 வயது சிறுமியை ஆசிரியர்கள் 2 பேர் இருட்டறைக்கு அழைத்து சென்று விளையாட்டு கேம் சொல்லி கொடுப்பதாக கூறி சிறுமியை சீரழித்துள்ளனர்.

இதில் அந்த சிறுமி கடந்த ஒரு வாரமாக சோர்வாக இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இதைக் கேட்டு, அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தனர்.

rape Abuse

புகாரின் பேரில், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலினி வழக்கு பதிவு செய்து கூடுவாஞ்சேரி அருகே ஒரத்தூர் அடுத்த நீலமங்கலத்தை சேர்ந்த காயேஷ்குமார் (40) மியூசிக் ஆசிரியர், திருநெல்வேலியைச் சேர்ந்த ராசையா (29) பீடி அட்டெண்டர் ஆகிய இருவரையும் நேற்று இரவு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின் போக்சோ சட்டத்தில் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர். மேலும் கைதான இருவரும் இதுபோன்று மற்ற சிறுமிகள் மற்றும் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளனரா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police

மேலும், இது குறித்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இதனை கண்டித்து பெற்றோர் இன்று காலை 8 மணி அளவில் பள்ளி முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web