கோவையில் வேலுமணியை எதிர்த்து சத்யராஜ் மகள் போட்டியா?

 
Divya Sathyaraj

எங்கப்பாவுக்கு அரசியலில் விருப்பம் இல்லை. எனக்கு அரசியல் பிடிக்கும். மக்களுக்கு சத்தான உணவு, பெண்களுக்கு முன்னுரிமை, சமூகநீதி என அனைத்தும் திமுக செயல்படுத்தி வருகிறது. அதனால் நான் திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன். தலைவர் தரும் எந்தப் பொறுப்பானாலும் உண்மையாக உழைப்பேன் என்று கூறியுள்ளார் திமுக வில் சேர்ந்துள்ள சத்யராஜின் மகள் திவ்யா.

இந்நிலையில் திவ்யா சத்யராஜுக்கு திமுகவில் என்ன பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. சமீபகாலத்தில் திமுகவுக்கு ஆதரவாக மேடைகளிலும் பேட்டிகளிலும் திவ்யா பேசி வந்தார். இதனால், செய்தித் தொடர்பாளர் பிரிவில் ஏதாவது பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வேலுமணியை எதிர்த்து திவ்யா சத்யராஜை களமிறக்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. வேலுமணியை தொகுதியிலே முடக்கிப் போடுவதற்காக கடந்த தேர்தலில் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேயே சிவசேனாபதியை களம் இறக்கினார்.

வேலுமணி வெற்றி பெற்றாலும், அவரை தொகுதியில் முடக்கிப் போடுவதில் வெற்றி கண்டார் ஸ்டாலின். 2026ம் ஆண்டு தேர்தலில் கார்த்திகேய சிவசேனாபதியை பாதுகாப்பான தொகுதியில் களமிறக்கவும் முதலமைச்சர் திட்டமிட்டுள்ளாராம். அதே வேளையில் வேலுமணியை தோற்கடிக்க வேண்டும் என்று சரியான வேட்பாளரை தேர்வு செய்யும் திட்டத்திலும் இருக்கிறாராம். இந்த நேரத்தில் திவ்யா சத்யராஜ் திமுக வில் சேர்ந்ததால் அவரையே வேலுமணியை எதிர்த்து களமிறக்கும் யோசனை முதலமைச்சருக்கு எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமியைத் தவிர அனைத்து முக்கிய அதிமுக தலைவர்கள், முன்னாள் அமைச்சர்களை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் திமுகவின் திட்டமாக உள்ளதாகவும் தெரிகிறது..

From around the web