போயஸ் கார்டனில் சசிகலா இல்லத்தில் கிரக பிரவேசம்.. கோ பூஜை நடத்தி விநாயகரை வழிபட்ட சசிகலா!

 
Sasikala

சென்னை போயஸ் கார்டனில் சசிகலாவின் புதிய இல்ல கிரகப்பிரவேசம் இன்று காலை நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனை அடுத்து பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆனார்.

ஜெயலலிதா உடன் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக போயஸ் கார்டனில் இருந்த வேதா நிலையம் இல்லத்தில் சசிகலா இருந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு பிறகு அது அரசு க்கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிற்கு வேதா நிலையம் இல்லம் சென்றது.

இதனால் போயஸ் கார்டன் பகுதியிலேயே வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்தே நடந்து வந்தது. சிறை விடுதலைக்கு பிறகு நேரடி அரசியலில் சசிகலா உடனடியாக இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக கூறி ஆன்மீக பயணம் கிளம்பினார்.

பின்னர் 2021-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது ஆதரவாளர்களை சந்தித்து வந்தார். பிரிந்து கிடக்கும் அதிமுகவை இணைப்பதே எனது நோக்கம் என்று கூறி அரசியல் பணிகளை சசிகலா மேற்கொண்டு வருகிறார்.


இதனைத் தொடர்ந்து இன்று சென்னை போயஸ் கார்டனில் சசிகலா கட்டியிருக்கும் புதிய பங்களாவுக்கான கிரகப் பிரவேசம் நடைபெற்றது. சசிகலாவின் புதிய இல்லத்தின் கிரகப்பிரவேசத்தில் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். முன்னதாக வேதா இல்ல வாசலில் உள்ள விநாயகர் கோயிலில் சசிகலா வழிபாடு நடத்தினார்.

From around the web