தீபாவளிக்கு சேலை.. பெண்கள் வாக்குகளை குறி வைக்கும் எடப்பாடி பழனிசாமி?
தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
தென்காசி சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி , 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்றால், ஒவ்வொரு தீபாவளிக்கும் வீட்டில் உள்ள பெண்களுக்கு சேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது வரையிலும் பொங்கல் திருநாளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வரும் நிலையில், தீபாவளிக்கும் இலவச சேலை என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளிப் பண்டிகையை திராவிட இயக்கங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனாலு, திமுக, அதிமுக அரசுகள் தீபாவளியை ஒட்டி சிறப்புப் பேருந்துகள், கூடுதல் விடுமுறைகள் என மக்கள் கொண்டாட்டத்திற்கு துணையாகவே இருந்து வருகின்றன.
தீபாவளிக்கு இலவச சேலை என்ற திட்டத்தை திமுக ஏற்காது என்பதாலேயே எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் என்று தெரிகிறது. இதை ஒரு விவாதப் பொருளாக ஆக்க அவர் முயற்சிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
