குடும்பங்களுக்கு தலா ரூ.7,500.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 
Ennore

மிக்ஜாம் புயல் கனமழையினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதமும், 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 வீதமும் வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையை அடுத்த மணலியில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் ஆலை இயங்கி வருகிறது. இங்கு கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்த நிலையில், சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகள், கொசஸ்தலை ஆற்றிலும் அதன் வழியாக எண்ணூர் பகுதியில் கடலிலும் கலந்தன.

எண்னூர் பகுதியில் வெள்ள நீரோடு கலந்து ஏராளமானோரின் வீடுகளிலும் எண்ணெய் கழிவுகள் புகுந்தன. கடலில் கடந்த எண்ணெய் கழிவால், மீன்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, சிபிசிஎல் நிறுவனத்தின் ஊழியர்கள், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் எண்ணெய் அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கடலில் பல சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு எண்ணெய் கழிவுகள் பரவியுள்ளதால், இன்னும் இந்தப் பணி தொடர்ந்து வருகிறது.

Ennore

இந்நிலையில் எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொசஸ்தலை ஆற்றில் எண்ணூர் முகத்துவார பகுதியில் கடந்த 05.12.2023 அன்று ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்றிட தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிகழ்வில் காட்டுக்குப்பம், சிவன்படைகுப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், வ.உ.சி நகர். உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடிவலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது. மேலும் இக்கிராமங்களை சார்ந்த மீனவர்கள் எண்ணெய் கசிவினால் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல இயலாததால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதல்வர் மு.கஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அத்தொகையும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கூடுதலாக எண்ணெய் கசிவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மேற்கண்ட மீனவ கிராமங்களை சார்ந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.12,500 வீதமும் மேலும் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்திட படகு ஒன்றிற்கு தலா ரூ.10,000 வீதமும் மொத்தம் 3 கோடி ரூபாய் அரசினால் ஒப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்குக்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.

MKS

மேலும் சென்னை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம் மொத்தம் 5 கோடியே 2 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கிட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே. மிக்ஜாம் புயல் கனமழையினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு 8 கோடியே 68 இலட்சம் ரூபாய் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web