ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000? தமிழ்நாடு அரசு எடுக்கும் முக்கிய முடிவு!

 
Ration-hike

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழையால் 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை நின்று சுமார் ஐந்து நாள்களாகியும் பல இடங்களில் இன்னும் வெள்ளநீர் வடியவில்லை.

தமிழ்நாடு அரசு கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதும் சில மணி நேரங்களில் பெருமழை கொட்டித் தீர்த்ததனால் நான்கு மாவட்டங்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருள்கள் பழுதாகின. மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கின.

Rain

இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்படைந்துள்ளனர். வெள்ள நிவாரணத்துக்காக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். முதற்கட்டமாக 5,060 கோடி ரூபாய் பணம் கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். பேரிடர் நிவாரண நிதி மூலம் 450 கோடி ரூபாயை விடுவித்த ஒன்றிய அரசு, சென்னை வெள்ள மேலாண்மை திட்டம் மூலம் 561.29 கோடி ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு வழங்கும் நிவாரணத்தை பொறுத்தே நிவாரண உதவிகள் வழங்க முடியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் இன்று அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மறுசீரமைப்பு, நிவாரணம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

Ration

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 30 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு ரேஷன் அட்டைகளுக்கும் தலா ரூ.4,000 வழங்கலாமா அல்லது ரூ.5,000 வழங்கலாமா என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

From around the web