தமிழ் புதல்வன் திட்டத்திற்கு 401 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.. தமிழ்நாடு அரசு அதிரடி!

 
MKS - 1000

தமிழ் புதல்வன் திட்டத்திற்காக முதற்கட்டமாக 401 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை ஆகஸ்ட் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைக்க உள்ளார். இதன்மூலம் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் அரசுப் பள்ளிகளிலும், தமிழ் வழியில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படித்து முடித்து, பட்டம், பட்டயம், மற்றும் ஐடிஐகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தமிழ் புதல்வன் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 401.47 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

school

தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. முன்னதாக தமிழ் புதல்வன் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

அதன்படி இந்த திட்டம் முழுமையாக மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படுவதால் இந்த திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

TN-Govt

இந்த தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி, மாணவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் ஆதார் அட்டை பெற பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அந்தப் பகுதியில் ஆதார் மையம் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web