அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1,000 மகளிர் உரிமை தொகை? பட்ஜெட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு?
தமிழ்நாட்டில் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி அனைத்து பெண்களுக்கும் பணம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அக்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதற்கிடையே, இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இதுவரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது வரையிலும், 7 மாதத்திற்கான தொகை குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நடைபெறவுள்ள நிலையில், இனி அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.