மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை.. தோ்வானவா்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1 அனுப்பி சோதனை!

 
1000 1000

கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்க்கான சோதனையாக ஒரு ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று, கடந்த 2 வருட காலமாகவே, பெரும் எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி, அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் இத்திட்டத்தில் இணைய 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்திருத்தனர். அவா்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவா்களாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனர்.

1000

இந்த நிலையில், தகுதியுள்ள விண்ணப்பதாரா்களின் வங்கிக் கணக்குகளை சரிபாா்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை உள்பட பல மாவட்டங்களில் விண்ணப்பதாரா்களின் வங்கிக் கணக்குக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஒரு ரூபாய் அனுப்பியவுடன், விண்ணப்பதாரா்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

தவறான வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத் தொகை சென்று விடக் கூடாது என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் அனுப்பப்படுவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், கைப்பேசி வழியாக விண்ணப்பதாரா்களைத் தொடா்பு கொண்டும் வங்கிக் கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

1000

மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவா்களில் 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், மிகையளவு மின்சார பயன்பாடுதான் என்பது தெரிய வந்துள்ளது. ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளின் விண்ணப்பங்கள்தான் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டுள்ளளன. இதைத் தொடா்ந்து, ஆண்டு வருமானம் அதிகமுள்ள விண்ணப்பங்களும் தகுதியிழப்புக்கு ஆளாகியுள்ளன.

From around the web