பட்டபகலில் யூடியூபரை மிரட்டிய ரவுடிகள்.. கேமராவை பறித்து அட்டூழியம்.. வைரலாகும் வீடியோ!

 
Chennai

சென்னை ரிட்சீ ஸ்ட்ரீட்டில் ஆட்டோவில் அமர்ந்து மது அருந்திய ரவுடிகள், யூடியூபரை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழில் ஏராளமாக யூடியூப் சேனல்கள் உள்ளன. குறிப்பாக தொழில்நுட்பத்தை வேடிக்கையாகவும் எளிமையாகவும் கற்றுக் கொடுக்கும் யூட்டியூப் சேனல்தான் A2D சேனல். நந்தகுமார் என்பவர் இந்த சேனலில் டெக்னாலஜி தகவல்களை வழங்கி வருகிறார். சென்னையில் தொழில்நுட்ப சாதனங்கள், கேட்ஜெட்கள் விற்கப்படும் இடமான ரிட்ச்சீ ஸ்ட்ரீட்டுக்கு தனது நண்பருடன் வீடியோ Vlog பதிவு செய்யச்  A2D சேனல் நந்தா சென்றுள்ளார். அப்போது, அங்கு போதையில் இருந்த ரவுடிகளால் மிரட்டப்பட்டுள்ளார்.

Vlog-ல் அவர்கள் பேசிக்கொண்டே சென்றபோது வந்த நபர் ஒருவர், அவர்களை மறித்து, என் கூட வாங்க.. நான் யார் தெரியுமா.. நிஜமான ரவுடி.. ம்ம்ன்னு சொன்னா வந்துருவானுங்க இப்போ.. என மிரட்டும் வகையில் பேசியுள்ளார். அப்போது அந்த நபர் போதையில் இருந்துள்ளார். அவர்களை ஒரு ஆட்டோவுக்கு அருகில் அழைத்துச் சென்றுள்ளார் அந்த நபர், அங்கு ஆட்டோவில் வைத்து சிலர் மது அருந்தியவாறு உள்ளனர். 

Chennai

அவர்கள் கேமராவை பறித்துக்கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் கையில் ஆயுதங்களையும் வைத்திருந்துள்ளனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பேசி, இவர்களிடம் கேமராவை திருப்பி வாங்கிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் பட்டப்பகலில், பரபரப்பான தெருவில் மது அருந்திவிட்டு, பொதுமக்களை அச்சுறுத்தும் இந்த காட்சியை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது. சென்னையில் மிகவும் பரபரப்பான ரிட்ச்சீ ஸ்ட்ரீட்டில் பட்டப்பகலில் ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தி பொதுமக்களை இப்படி மிரட்டும் தைரியம் எப்படி வருகிறது என பலரும் கொந்தளித்துள்ளனர்.


இது தொடர்பாக யூடியூபர் தீபன் சக்கரவர்த்தி, சென்னை மாநகர போலீசாரை குறிப்பிட்டு, எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதையடுத்து, “தகுந்த நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என சென்னை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

From around the web