உருட்டுக்கட்டைகள்! சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்கு!!

தாக்குதல்கள் நடத்தும் எண்ணத்துடன் உருட்டுக்கட்டைகள் வைத்திருந்ததாக சீமான் மற்றும் 180 பேர்கள் மீது நீலாங்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கடந்த சில வாரங்களாக தந்தை பெரியாரை இழிவு படுத்தும் வகையில் பேசி வருகிறார். அவருக்கு திராவிட இயக்கத்தினர்களும் பெரியார் ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிப்பு வருகின்றனர்.
கடந்த 22ம் தேதி நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடுவதாக பெரியார் உணர்வாளார்கள் கூட்டமைப்பினர் அறிவித்தனர். காலை 11 மணியளவில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், மே17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளார் திருமுருகன் காந்தி, திராவிடர் விடுதலைக் கழகம் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் உள்பட 15க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சீமான் வீட்டை முற்றுகையிட்டனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தை எதிர்கொள்ளும் வகையில் சீமான் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சீமான் வீட்டில் குவிந்து இருந்தனர். அவர்களின் கைகளில் உருட்டுக்கட்டைகள் இருந்தது. முற்றுகைப் போராட்டம் நடத்தும் பெரியார் ஆதரவாளர்களை தாக்கும் நோக்கத்தில் அங்கே கூடியிருந்தவர்களில் 180 பேர் மீதும் சீமான் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.